Monday, May 4, 2015

உத்தம வில்லன்

ஒரு நடிகன், அவனுடைய வாழ்க்கை... இதுதான் ‘உத்தம வில்லன்’!
பிரபல நடிகராக கமல், அவருடைய மாமனார் மற்றும் தயாரிப்பாளராக கே.விஸ்வநாத். கமலின் குருவாக கே.பி. அவரைச் சுற்றி நடக்கும் பிரச்னைகள், அவருக்கு வரும் மிகப்பெரிய ஆபத்து. அது என்ன ஆபத்து, அவர் மீண்டாரா, இல்லையா என்பதுதான் மீதி கதை.
நடிகனாக கமல். தனது சொந்த வாழ்வின் பெரும்பாலான தருணங்கள் என்பதால் நடிக்க சொல்லிக் கொடுக்கவா வேண்டும்? அவருக்கு குருவாக கே.பாலசந்தர் வரும் காட்சிகளில் எல்லாம் நம்மையும் மீறிய சோகம்தான் நெஞ்சில் நிறைகிறது.
மற்றவர்கள் அவரவர் பாத்திரங்களைச் சரியாக செய்துள்ளனர். எனினும், நாசர் வரும் காட்சிகள் பல இடங்களில் சிரிப்பைவிட முகச்சுழிப்பையே அதிகம் உண்டாக்குகிறது. அதை சரிசெய்திருக்கலாம். பூஜா குமார் வரும் காட்சிகளும் கொஞ்சம் ஓவர் ஆக்டிங்கோ என்றே தோன்றுகிறது.
படம் முழுக்க கமலும் பாலசந்தருமே தெரிகின்றனர். 'ஆமாம். ரமேஷ் அரவிந்த் தானே படத்தின் இயக்குநர்' என அவ்வப்போது மனம் கேட்பதை நிறுத்த முடியவில்லை. பூர்வ ஜென்மம், நிகழ்காலம் என ஏதேதோ கதை நினைத்து சென்றால் நீங்கள் அவுட். இது வேற மாதிரி அல்ல வழக்கம் போலான கதை. படம் பல இடங்களில் தொங்கி நிற்கிறது. முக்கியமாக முதல் பாதி தேமே எனச் செல்வதை பொறுத்துக்கொள்ள முடியவில்லை.இரணிய நாடகத்தில் நரசிம்மரையே சாய்ப்பதுபோல் காட்சியமைப்பை மாற்றியமைத்த விதம்தான் நெருடல்.

'சிங்கிள் கிஸ்கே லவ்வா', 'காதலாம்' பாடல்கள் அழகு, இரணிய நாடகம் கமல் ரசிகர்களுக்கு ஸ்பெஷல். பின்னணி, சோகக் காட்சிகளில் அழுத்தம். எனினும், அரசர் கால பகுதியில் ஒரே பிரமாண்ட அறிவிப்பைத் தாண்டி பெரிய பின்னணி இசை ஏதும் இல்லை.
கைதேர்ந்த கலைஞன், கலைஞனாகவே நடிக்கும்போது இன்னும் எத்தனை பெரிய ஆச்சர்யங்கள் படத்தில் இருந்திருக்க வேண்டும்? எப்போதும் போல் கமல் கமலாக நடிக்கிறார் என்பதில் என்ன ஆச்சர்யம் இருக்கிறது?
சரி, பார்க்கலாமா? குருவான கே.பாலசந்தர், சிஷ்யனான கமல் இருவரையும் ஒருசேர நாம் நேரில் பார்த்தது மிகக் குறைவு. இனியும் வாய்ப்புகள் இல்லை. அதைக் அதிகம் காண வேண்டும் எனில், படம் பார்க்கலாம்!

0 comments:

Post a Comment